தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 2026-2027 நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது, இல்லத்தரசிகளுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியச் சலுகைகள் போன்ற குடும்பத் தலைவிகளைக் கவரும் அதிரடி அறிவிப்புகள் இதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி பயில்வோருக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்கள் நாளை வெளியாகலாம். சிறு மற்றும் குறுந் தொழில்களைத் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

இது தவிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பக் கல்வி உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான புதிய அறிவிப்புகளும் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, நாளை காலை ஒன்பதரை மணிக்குச் சட்டப்பேரவை கூடும் என்றும், நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு அலுவல் ஆய்வுக் குழு கூடி அடுத்தடுத்த கூட்டங்களுக்கான கால அட்டவணையை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், பழைய ஆவணங்களை மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியின் தேர்தல் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.