நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தமிழகத்தைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியிலும் பொதுச் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தனது முதல் தேர்தலிலேயே கட்சி அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சின்னத்தில் களம் காண உள்ளது உறுதியாகியுள்ளது.

தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை உள்ளிட்ட 10 விருப்பச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட ‘விசில்’ சின்னத்தைப் பொதுச் சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது.

தற்போது புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தவெக-வுக்கு அதே ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களிலும் ஒரே சின்னத்தில் கட்சி களம் இறங்குகிறது.  கட்சித் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, முதல் தேர்தலிலேயே ஒரு பொதுவான சின்னத்தைப் பெற்றது தவெக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் “விசில்” சின்னத்தை முன்னிலைப்படுத்தி தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாகப் புதிய கட்சிகளுக்குத் தொகுதிக்குத் தொகுதி வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் தகுதியைப் பெற்றுள்ளது. இது மக்களிடையே சின்னத்தைக் கொண்டு சேர்க்க எளிதாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.