திருச்சி மாவட்டம் லால்குடியில் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகக் கட்டடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
திறப்பு விழாவில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழக அரசியலில் லால்குடிக்கு முக்கிய இடமுண்டு. அண்ணா, கலைஞர் காலந்தொட்டே கழகத்திற்கு வலுசேர்த்த ஊர் இது. முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், தற்போதைய அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரைத் தந்த பெருமை இந்த மண்ணுக்கு உண்டு,” எனப் புகழாரம் சூட்டினார்.
விழாவில் அவர் மேலும் பேசியதாவது, தமிழக அரசின் திராவிட மாடல் திட்டங்களான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்றவை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முடக்கச் சிலர் முயன்றனர். ஆனால், முதல்வர் அதனை முறியடித்து, கோடைக்கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியுள்ளார்.
மீண்டும் கழக ஆட்சி அமையும் போது, இந்த உரிமைத் தொகை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
