வங்காளதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை உறுதி செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசானுல் ஹோக் மிலன், அண்டை நாட்டுத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை அழைப்பது ஒரு பொதுவான மரியாதை என்றும், உலக நாடுகள் அனைத்தும் வங்காளதேசத்துடன் கைகோர்க்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ள நிலையில், தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
மேலும் சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரை “அனைவரிடமும் நட்பு” என்ற கொள்கையையேத் தங்கள் கட்சி பின்பற்றுவதாகவும், யாருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் பி.என்.பி. கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சூழலில், வங்காளதேசத்தின் புதிய அரசு இந்தியாவிற்கு முறைப்படி அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
