ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுவானில் சிக்கித் தவித்த ஜப்பானிய நாட்டவரை இந்தியக் கடற்படை மிகச்சிறப்பாக மீட்டுள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பலில் இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மேலும் தகவலறிந்த இந்தியக் கடற்படை, உடனடியாக தனது ‘சீ கிங்’ ரக ஹெலிகாப்டரை அனுப்பி வைத்து, அந்த நபரை வான்வழியாகப் பத்திரமாக மீட்டது. மீட்கப்பட்ட அந்த ஜப்பானியர் உடனடியாக கடற்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இக்கட்டான சூழலில் இந்தியக் கடற்படை மேற்கொண்ட இந்த துரித நடவடிக்கை, சர்வதேச கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பையும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே நிலவும் வலுவான நட்புறவையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
