மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த ஆத்திரத்தில் மின்வாரிய ஊழியரைத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் கலா பகுதியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் சிங்கால் மற்றும் அவரது மனைவி ஷில்பி சிங்கால் ஆகியோர், தங்களுக்கு மின்சார கட்டணம் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வந்ததாகக் கூறி உள்ளூர் மின்வாரிய அலுவலகத்திற்குப் புகாரளிக்கச் சென்றனர். அங்கு பணியில் இருந்த வினோத் குஷ்வாஹா என்ற ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதியினர், திடீரென ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றனர்.
#WATCH | Angry Over A High Electricity Bill, Couple Hit An Outsourced Meter Reader At Electricity Department In MP’s Morena #MPnews #MadhyaPradesh pic.twitter.com/AOprsXj9Xf
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 15, 2026
அப்போது அந்தப் பெண் தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி ஊழியர் வினோத்தை ஓங்கி அடித்ததோடு, தகாத வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். இந்த மோதலால் அலுவலகமே போர்க்களமாக மாறிய நிலையில், மற்ற ஊழியர்கள் ஓடி வந்து அவர்களைத் தடுத்து மீட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தம்பதியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின் கட்டண விவகாரத்தில் ஊழியர் தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
