கேரள மாநிலம் ஆலப்புழாவில், தனது சொந்த மகளையே தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாகத் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலப்புழா மாவட்டம் புன்னப்பறா பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுமிக்கு, 8 வயதாக இருந்தபோதே அவரது தாய்மாமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதன் காரணமாக, அந்தச் சிறுமி குழந்தைகள் நலச் சங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆசிரமத்தில் தங்கி வளர்ந்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, அந்தச் சிறுமியின் தந்தை அவரை ஆசிரமத்திலிருந்து அழைத்து வந்து, தனது உறவினர் ஒருவரின் கண்காணிப்பில் வீட்டில் வைத்து வளர்த்து வந்தார். ஆனால், சிறுமிக்கு அரணாக இருக்க வேண்டிய தந்தையே, தனது உறவினர்களுடன் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தொடர் சித்திரவதை நீடித்து வந்துள்ளது.
தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தச் சிறுமி, தனது வேதனையைத் தோழி ஒருவரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி, தனது பெற்றோரிடம் விபரத்தைக் கூற, அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரது தந்தை மற்றும் ஒரு உறவினரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூரச் செயலில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மகளையே தந்தையே சித்திரவதை செய்த இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
