மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மான்கூர்டு பகுதியில், திருமணத்திற்கு மறுத்த 17 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சானியா என்ற அந்த இளம்பெண், அச்சிறுவனை காதலிப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டிற்கு ஏமாற்றி வரவழைத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு சிறுவனிடம் அத்துமீறியதுடன், நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் இது குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அந்த இளம்பெண் சிறுவனை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த இளம்பெண் அச்சிறுவனைக் கடத்திச் சென்று மிரட்டியுள்ளார். தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் அச்சுறுத்தியதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மான்கூர்டு போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.