மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 17 வயது சிறுவனைக் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 19 வயது இளம் பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் அந்தப் பெண் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவனும், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். அந்தப் பெண் அந்தச் சிறுவனை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறுவன் அதற்குச் சம்மதிக்கவில்லை.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், ஆள் இல்லாத நேரத்தில் சிறுவனைத் தனது வீட்டிற்கு வரவழைத்த அந்தப் பெண், அங்கு அவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சிறுவனை அவர் மிரட்டியுள்ளார்.

அதன்பிறகு, 2025 ஆகஸ்ட் முதல் 2026 பிப்ரவரி வரை, தான் வீட்டில் தனியாக இருக்கும்போதெல்லாம் அச்சிறுவனை வீட்டிற்கு வரவழைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தப் பெண் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

சிறுவன் திருமணத்திற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால், அந்தப் பெண் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் அச்சிறுவனைக் கடத்திச் சென்று சிறை வைத்துள்ளார். அங்கிருந்து  தப்பித்து வந்த சிறுவன், தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார்.

பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, மான்குர்த் போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த அந்தப் பெண் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் பெண் ஒருவர் சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.