தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் நாகரிகம் மற்றும் பெண் உரிமை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “தமிழகமே என் வீடு; 8 கோடி மக்களே என் குடும்பம். 30 சதவீத வாக்கு வங்கியுடன் தவெக முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்குப் பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்; திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது புரியும்” எனத் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களை அடிப்போம் என்று முன்பு முழங்கிய பாஜக நிர்வாகி குஷ்பு, தற்போது திரிஷா குறித்த அவதூறுப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது வருத்தமளிக்கிறது. அதேநேரம், இந்த விவகாரத்தில் கனிமொழி எம்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களுக்கு உரிய மரியாதையையும் சமூக அந்தஸ்தையும் வழங்குவது ஒவ்வொருவரின் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மேலும் கூறியதாவது, பெண் குழந்தைகளை 19 வயது வரை ‘பெண் தெய்வங்கள்’ என்றும், அதற்கு மேல் ‘தேவதைகள்’ என்றும் நான் அழைத்து வருகிறேன். நாட்டின் ஆணிவேராக இருக்கும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், தனது பேச்சுக்காகத் தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதே அரசியல் நாகரிகமாகும். பெண்களை இழிவுபடுத்திவிட்டு, ‘பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா தமிழ்நாடு’ என பாஜக பேசுவது முரண்பாடாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
