கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

பெண்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பாஜக தடுப்பதாக திமுகவினர் கூறுவது ஒரு “டிராமா” என்றும், தேர்தல் நேரத்தில் காதில் பூ சுற்றும் வேலையை அரசு செய்வதாகவும் அவர் சாடினார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முதல் பேருந்து நிலையங்கள் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், வெறும் பணத்தைக் கொடுத்துப் பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்துப் பதிலளித்த வானதி சீனிவாசன், வழக்கமாக நாகரிகமாகப் பேசக்கூடிய நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தனது கருத்தை அவரிடம் நேரில் கூறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம் மற்றும் திமுக பேச்சாளர்களின் அநாகரிகப் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்துப் பேச திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எந்த அருகதையும் இல்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.