மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார். மகளிர் உரிமைத் தொகையுடன் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் சிறப்புத் தொகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதற்காக மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் எப்போதுமே விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள் என்றும், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ அமையும் போது, மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை காரணமாகவே திமுக அரசு தற்போது அதிக பணம் வழங்குவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அறிஞர் அண்ணாவே விஜய்யைப் பார்த்துதான் திமுகவைத் தொடங்கினார்” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

விஜய்யின் அரசியல் விமர்சனங்களை நகைச்சுவையாகக் கையாண்ட உதயநிதியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் தவெக கூட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களுக்கு உரியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், எதற்கும் கலங்காமல் மக்கள் நலப்பணிகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.