புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய ஒரு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரை நோக்கி ஒரு மர்ம டிரோன் பறந்து வந்தது.
பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி நுழைந்த அந்த டிரோனை கண்டதும் உஷாரான என்எஸ்ஜி (NSG) கமாண்டோக்கள், உடனடியாக டிரோன் எதிர்ப்பு துப்பாக்கியால் அதனைச் சுட்டு வீழ்த்தினர். அமித்ஷா வருகையையொட்டி ஏற்கனவே காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அத்துமீறல் பாதுகாப்புப் படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரைப் பிடித்துள்ளனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகிலேயே கடையில் வேலை பார்க்கும் அவர், எதற்காக டிரோனை பறக்கவிட்டார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என ரகசிய இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
1100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் நடந்த இந்தச் சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
