தமிழக அரசியலில் அதிரடி வரவாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுவரை திமுக, அதிமுக, பாஜக என அனைவரையும் விமர்சித்து வந்த விஜய், நேற்று முழுவதுமாக திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்கினார்.
ஒருமுறை கூட ‘பாஜக’ என்ற வார்த்தையை அவர் உச்சரிக்காதது அரசியல் வட்டாரத்தில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசனை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஜெகனைச் சந்தித்தபோது, “தேவையற்ற மோதல்களைத் தவிர்த்து, பிரதான எதிரியான திமுகவை மட்டும் குறிவையுங்கள்” என அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
மற்றொரு முக்கியக் காரணமாக, விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரமும் முன்வைக்கப்படுகிறது. தணிக்கைக் குழு சிக்கலால் முடங்கியுள்ள இப்படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி மேலிடத்தின் உதவி தேவைப்படுவதால், விஜய் தற்போது பாஜகவை விமர்சிக்காமல் ‘அடக்கி வாசிக்கிறார்’ என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், விஜய்யின் இந்தத் திடீர் மௌனம் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான ஒரு மூலோபாயமாகவே பார்க்கப்படுகிறது.
