வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் அந்த நாட்டின் அடுத்த உயரிய தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் தொடர்ந்து பங்கேற்று வருவது இந்த ஊகங்களை உறுதிப்படுத்துகிறது.

மேலும் குறிப்பாக, நாட்டின் முக்கிய ராணுவத் தளபதிகள் இவருக்கு மரியாதை செலுத்துவதும், அதிகாரப்பூர்வமாக ‘வாரிசு’ அந்தஸ்தில் இவர் முன்னிறுத்தப்படுவதும் வடகொரியாவின் எதிர்கால அரசியல் மாற்றத்தை நோக்கிய முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் வடகொரியா உருவானது முதல் கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே உச்ச அதிகாரத்தில் இருந்து வரும் நிலையில், ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக அமையும். ஆணாதிக்கம் நிறைந்த வடகொரிய அரசியலில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்கனவே செல்வாக்குடன் விளங்குவது, ஜு ஏ-வுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர அரசியல் பயிற்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் அவருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, வடகொரியாவின் அதிகாரம் ஒரு பெண் தலைவரின் கைகளுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகத் தெரிகின்றன.