தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சி இந்த முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தத் தேர்தலில் சீமான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த தேர்தல்களில் கடலூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்ட அவர், இந்த முறை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
காரைக்குடியில் அவர் போட்டியிடுவது உறுதியாகும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் தேர்தல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
