தமிழகத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து மொத்தம் ₹5,000 இன்று (பிப். 13) வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் இந்த நடவடிக்கையை வி.கே.சசிகலா தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக பொறுப்பேற்றது முதல் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு எனப் பல்வேறு வழிகளில் மக்களைக் கசக்கிப் பிழிந்து இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டது.

தற்போது தேர்தல் நெருங்குவதையும், அதில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பதையும் உணர்ந்து, மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என இத்தகைய மாய்மால வித்தைகளில் இறங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழக மக்களைக் குறைத்து எடைபோட்டால் கடைசியில் ஏமாறப்போவது திமுகவினர்தான்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.