சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது, சேலத்தில் தங்கி வெள்ளிப் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பொதுக்கூட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அன்னதானப்பட்டி காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சாதாரண மாரடைப்பா அல்லது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட பாதிப்பா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சூரஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.