மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழக பெண்களுக்கு திடீரென ₹5,000 வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்த ‘மாஸ்டர் பிளான்’ குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கியுள்ளார். முன்னரே அறிவிக்காமல் ஏன் இவ்வளவு ரகசியமாகச் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் இதை முன்னரே அறிவித்துவிட்டுச் செய்திருந்தால், எதிர்க்கட்சியினர் உடனே நீதிமன்றத்திற்குச் சென்று இதற்குத் தடை உத்தரவு வாங்கிவிடுவார்கள். இதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ₹5,000 கிடைக்காமல் போய்விடும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையால்தான் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காமல் போகிறது. அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல்வர் அவர்கள் எதையும் முன்கூட்டியே அறிவிக்காமல் அதிகாலையிலேயே இந்த சர்ப்ரைஸைக் கொடுத்தார். இப்போது மக்கள் கையில் பணம் சென்று சேர்ந்துவிட்டது, இனி அவர்கள் நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மகளிர் வங்கிக் கணக்கில் பணம் ஏறியது ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், அமைச்சரின் இந்த ‘கோர்ட்’ குறித்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
