தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோவில், மகளிர் உரிமைத் தொகையை முடக்க டெல்லி மற்றும் தமிழகத்தில் ஒரு கூட்டம் சூழ்ச்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “யாரோ முடக்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார். அவருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், அந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சிப்பவர்கள் யார் என்று வெளிப்படையாக அறிவிக்கட்டும்.

பல ஆயிரம் கோடிகளை ஊழல் மூலம் ஏமாற்றிவிட்டு, தற்போது தேர்தலுக்காகப் பெண்களிடம் சில நூறு ரூபாய்களைக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்” எனச் சாடினார். மேலும், சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பிற்கு வந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்தது குறித்த தனது வருத்தத்தையும் அவர் இந்தச் சந்திப்பில் பதிவு செய்தார்.