சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை கடுமையாகச் சாடினார்.
“பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் பேசுவதுதான் நயினார் நாகேந்திரனின் பழக்கம். ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அவர் பேசுவது கண்டனத்திற்குரியது. அவர் ஓர் அரசியல்வாதியாகப் பேசாமல், பண்ணையார் அல்லது தொழிலதிபர் போலப் பேசி வருகிறார். 20, 30 ஆண்டுகள் அரசியல் செய்தும் நோட்டாவுக்குக் கீழே ஓட்டு வாங்கிய ஒரு கட்சி பாஜக.
எங்கள் தலைவர் விஜய்யைப் பார்த்துப் பயப்படுவதாலேயே அவர்கள் இவ்வாறு பேசி வருகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சூரஜ் குறித்துப் பேசிய அவர், “சூரஜிற்குத் தேவையான முதலுதவிகள் அனைத்தும் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன; இருந்தும் அவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தவெக செய்யும்” என்று உறுதியளித்தார்.
