மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள பிதர்வார் பகுதியில், விவாகரத்து பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தையை ஒப்படைக்கும்போது ஏற்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
சம்பவத்தன்று, காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அதிகாரிகளுக்கு முன்னிலையில் பிரிந்து வாழும் தம்பதியினர் நின்றனர். அங்கு சட்டரீதியான ஆவணங்கள் பரிமாறப்பட்டன. அப்போது, தந்தையின் கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நின்ற சிறுவனை, தாய் தன்னிடம் அழைக்க முயன்றார். ஆனால், அந்தச் சிறுவன் தந்தையை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிடிவாதமாக மறுத்தான்.
ஒரு கட்டத்தில் தாய் அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகத் தந்தையின் மடியில் இருந்து தூக்கியபோது, அந்தச் சிறுவன் கதறி அழத் தொடங்கினான். அங்கிருந்தவர்கள் சிறுவனைச் சமாதானப்படுத்த சாக்லேட் கொடுத்தபோதும், அதைத் தட்டிவிட்டுத் தனது தந்தையை நோக்கியே கைகளை நீட்டி அழுதது அங்கிருந்தவர்களை உலுக்கியது.
View this post on Instagram
தன் கண்முன்னே குழந்தை கதறுவதைக் கண்டு தந்தை பேச முடியாமல் திகைத்து நின்றார். அருகில் இருந்த தாத்தாவால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில், அழுதுகொண்டிருந்த சிறுவனைத் தூக்கிக்கொண்டு தாய் அறையை விட்டு வெளியேறினார். தந்தை அதே இடத்தில் நிலைகுலைந்து நின்ற காட்சி காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, இந்தச் சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட விவாகரத்து முடிவின் ஒரு பகுதி என்பது தெரியவந்தது. சிறுவனின் தாயார் சோம்ப்ரீத் கவுர், தனது மாமியார் வீட்டில் வரதட்சணை கொடுமை மற்றும் துன்புறுத்தல் இருப்பதாகப் புகார் அளித்து, தனது பெற்றோருடன் செல்ல விரும்பி விவாகரத்து பெற்றுள்ளார்.
இரு குடும்பத்தாரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போலீஸ் மத்தியஸ்தம் மூலம் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகத் தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தை, திடீரென தாயிடம் செல்ல நேர்ந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியே இந்த அழுகைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர். “பிரிவு என்பது ஒரு சாபம்; இதுபோன்ற ஒரு நாளைக் கடவுள் யாருக்கும் காட்டக்கூடாது” என்றும், “பெரியவர்களின் சண்டையில் அந்த அப்பாவி குழந்தைதான் பலியாகிறது” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
