மும்பை கடலோரச் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இசைச் சாலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் பயணம் செய்த காணொளி தற்போது இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடலோரச் சாலையில் நரிமன் பாயிண்ட் முதல் வொர்லி வரையிலான பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில் வாகனம் செல்லும்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடலின் இசை ஒலிக்கிறது. சர்பராஸ் கான் தனது காரில் செல்லும்போது அந்தப் பாடலின் இசை காரின் உள்ளே எதிரொலிப்பதைக் கண்டு வியந்து அதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த இசைச் சாலையானது அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய பள்ளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது வாகனங்கள் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது டயர்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மூலம் இசை உருவாகிறது.
இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க உதவும் ஒரு பாதுகாப்பு முயற்சியாகவும் கருதப்படுகிறது. ஹங்கேரி நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் இத்தகைய சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
