மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சவுசாலா பகுதியில், பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் உதவிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றபோது, தேர்வு மையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஜன்னல்கள் வழியாக விடைத்தாள்களை உள்ளே வீசியுள்ளனர்.

மேலும் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கக் கல்வித்துறையினர் முதன்முறையாக டிரோன் கேமராக்களைப் பயன்படுத்தியதில், பெற்றோர்கள் சுவர்களில் ஏறி ஆபத்தான முறையில் மாணவர்களுக்கு உதவும் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகின.

இதனால் டிரோன் கேமரா தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன. அந்தத் தேர்வு மையம் திறந்த வெளி வளாகத்தில் அமைந்திருந்ததால், வெளியாட்கள் எளிதாக மாணவர்களை அணுக முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோன் காட்சிகளின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.