தற்போதுள்ள அதிமுக என்பது எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா உருவாக்கிய கட்சி அல்ல, அது 2017-ல் உருவான ‘கூவத்தூர் அதிமுக’ என்று முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆவி தான் தன்னை வழிநடத்தி, தாய் கழகமான திமுகவிற்கு அனுப்பி வைத்ததாக உருக்கமாகத் தெரிவித்தார். அதிமுகவின் தற்போதைய தலைமை குறித்து அவர் முன்வைத்துள்ள இந்த “ஆவி” தொடர்பான கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தனக்கு ஒரு பிரச்சனை என்று வந்ததும், ஒட்டுமொத்த அதிமுக என்ற கட்சியையே டெல்லிக்கு அடகு வைத்துவிட்டதாகச் சாடினார். இதன் விளைவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், இப்போது எடப்பாடி பழனிசாமியை இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
