திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் கணபதி என்பவர், நேற்று காலை தனது ஸ்கூட்டரில் திருச்சி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றக் கட்டடம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து அவரது உதவியாளர் ஓடிவந்து ஒரு அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தார்.
கணபதியின் ஸ்கூட்டர் இருக்கையின் மீது யாரோ ஒரு மர்ம நபர் துண்டுச்சீட்டு ஒன்றை வைத்துச் சென்றிருந்தனர். அந்தச் சீட்டில் இந்த வண்டிக்குள் பாம்பு உள்ளது என்று எழுதப்பட்டிருந்ததுடன், வாகனத்தின் எண் மற்றும் நேரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சீட்டு பறந்துவிடாமல் இருக்க அதன் மீது ஒரு சிறிய கல்லும் வைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வக்கீல் கணபதி, உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டரின் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றித் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தின் இண்டிகேட்டர் பகுதிக்கு பின்னால் ஒரு சிறிய சாரைப்பாம்பு மறைந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றனர். வாகனத்தில் பாம்பு புகுந்ததைக் கவனித்த யாரோ ஒரு நபர், மனிதநேயத்துடன் அந்தத் துண்டுச்சீட்டை எழுதி வைத்துவிட்டுச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
