கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பஸ்தாவாடா கிராமத்தைச் சேர்ந்த மெகபூப் மற்றும் நூர்ஜன் தம்பதி, சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் வகையில் இந்து இளைஞர் ஒருவருக்குத் தங்களின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது அண்டை வீட்டில் வசித்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில், ஆதரவற்ற நிலையில் நின்ற அவர்களின் நான்கு வயது மகன் சோமசேகர் மற்றும் இரண்டு வயது மகன் வசந்த் ஆகியோரை மெகபூப் தம்பதியினர் தத்தெடுத்தனர்.

தங்களுக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருந்தபோதிலும், இந்த இரண்டு சிறுவர்களையும் அரவணைத்து வளர்த்ததோடு அவர்களின் இந்து மத அடையாளங்களை மாற்றாமல் அதே பாரம்பரியத்திலேயே கல்வி மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துச் சிறப்பான முறையில் வளர்த்தெடுத்தனர்.

தற்போது வளர்ந்து ஆளான சோமசேகருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த மெகபூப் தம்பதியினர், இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து முறைப்படி நிச்சயம் செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இந்து மதச் சடங்குகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி சோமசேகரின் திருமணத்தை மெகபூப் மற்றும் நூர்ஜன் தம்பதியினர் முன்னின்று நடத்தி வைத்தனர்.

மதத்தின் பெயரால் பல்வேறு மோதல்கள் நடக்கும் தற்போதைய சூழலில், மாற்று மதத்தைச் சேர்ந்த சிறுவர்களைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்குத் தங்களின் சொந்தச் செலவில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த இந்த முஸ்லிம் தம்பதியினரின் செயலைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.