தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சித்ரா என்ற 25 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு ‘டிக்டாக்’ பயிற்சி எடுக்கச் சென்ற சித்ராவிற்கும், அங்கிருந்த பயிற்சியாளருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி பயிற்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மாயமான சித்ராவை, போலீசார் தேடி வந்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அங்கு வந்த சித்ரா, “நான் என் பெற்றோருடன் செல்ல மாட்டேன், என் காதலனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதம் பிடித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், “அந்தப் பயிற்சியாளர் பல பெண்களை ஏமாற்றியவர், மகளை அவனுடன் அனுப்பாதீர்கள்” என்று கூறி போலீஸ் நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, “பெண்ணின் விருப்பமே முக்கியம்” என்று கூறிய தொப்புர் போலீசார், சித்ராவை அவரது இரண்டு குழந்தைகளுடன் காதலனின் காரிலேயே அனுப்பி வைத்தனர்.
தன் கண் முன்னாலேயே மகள் காதலனுடன் சென்றதைப் பார்த்து அவமானத்திலும் வேதனையிலும் பெத்த மனம் துடித்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
