தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது அரசியலையும் தாண்டிய ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு என்றும், ராகுல் காந்தியைத் தனது சகோதரராகவே கருதுவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இருப்பினும், கூட்டணியில் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள கருத்துக்கணிப்புகளின்படி, எதிர்க்கட்சிகளை விட திமுக கூட்டணி 12 சதவீத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் மெகா வெற்றியைப் பதிவு செய்வோம் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வித் துறையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய பாஜக அரசின் நெருக்கடிகளை முறியடித்து ‘ஸ்டாலின் 2.0’ ஆட்சியைத் தொடருவோம் எனத் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.
அதே சமயம், சென்னையில் திமுக பலவீனமாக உள்ள 4 தொகுதிகள் உட்பட மொத்தம் 70 தொகுதிகள் அடங்கிய ரகசியப் பட்டியலைத் தயார் செய்து, அங்கு கூடுதல் கவனம் செலுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
