பெங்களூரு அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் நகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், வெளியேற வழி தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அயர்ந்து தூங்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

உணவகம் நடத்தி வரும் பிரேமநாத் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து இரண்டு திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டைச் சூழ்ந்து கொண்டதால் ஒருவன் தப்பியோடிவிட்டார். ஆனால் போதையில் இருந்த மற்றொரு திருடன் மீண்டும் கூரை வழியாக ஏற முடியாமலும், வெளியேற வழி தெரியாமலும் திகைத்துப் போய் இறுதியில் வீட்டிற்குள்ளேயே உறங்கிவிட்டார்.

மறுநாள் காலை வீட்டின் உரிமையாளர் பிரேமநாத் திரும்பி வந்து கதவைத் திறந்தபோது, தரை விரிப்பில் கொள்ளையன் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிடிபட்ட அந்த நபர் வீட்டில் திருடிய ஐந்தாயிரம் ரூபாயைத் திரும்ப ஒப்படைத்ததுடன், கூலிப் பணம் கிடைக்காததால் பிழைப்பிற்காகத் திருட வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பெங்களூருவில் மற்றொரு சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுவர்களைப் போல வேடமணிந்து புகுந்த இரண்டு பெண்கள் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றனர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் உதவியுடன் அந்தப் பெண்களைக் கைது செய்த காவல்துறையினர், நகரில் இது போன்ற வேறு திருட்டுச் சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.