நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு, காங்கிரஸ் எம்.பி.க்களின் நடத்தை தரக்குறைவாக இருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அந்த வீடியோவை வெளியிட்டமைக்கு அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பதாகைகளை ஏந்தி தங்களின் உரிமையை அமைதியான முறையில் கோருவதை அந்த வீடியோ தெளிவாகக் காட்டுவதாகவும், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வராதது அவரது பயத்தையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய தேசிய விவகாரங்கள், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் எல்லை ஊடுருவல்கள் குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாலேயே இத்தகைய சூழல் உருவாவதாக ஜோதிமணி சாடியுள்ளார். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அச்சமற்றவர்கள் என்றும், எந்த மிரட்டலும் தங்களை மௌனமாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தின் புனிதம் குறித்துப் பேசும் அமைச்சரின் கருத்தைப் பாராட்டி, அதை ஒரு ‘அபாரமான நகைச்சுவை’ என கிண்டலாகக் குறிப்பிட்டுத் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.