உல்லாசப் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கடன் அட்டையைத் தொலைத்துவிட்டுத் தவித்த நிலையில் அவருக்கு இந்திய நண்பர்கள் செய்த உதவி இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்லின் நகரைச் சேர்ந்த 29 வயது ஜெனிபர் என்ற அந்தப் பெண் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது தனது ஒரே ஒரு கடன் அட்டையையும் தொலைத்துவிட்டு செய்வதறியாது திகைத்துள்ளார்.
View this post on Instagram
இக்கட்டான இந்தச் சூழலில் அவரது இந்திய நண்பர்கள் உடனடியாகத் தங்களது யுபிஐ எண்களைப் பகிர்ந்து பணப் பரிமாற்றம் செய்து அவரது பயணத்திற்குத் தேவையான முழு நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இந்திய நண்பர்களின் அதீத நம்பிக்கையும் உதவியும் தன்னை ஒரு நொடி கூட கவலைப்பட வைக்கவில்லை என்று ஜெனிபர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்தியர்களின் விருந்தோம்பல் மற்றும் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தான் வாங்கிய பணத்தை மீண்டும் நண்பர்களிடம் செலுத்திவிட்டதாகத் தெரிவித்த ஜெனிபர் இந்தியாவில் தனக்குக் கிடைத்த இந்த உதவி ஒருபோதும் மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
