இந்தியா குறித்து வெளிநாடுகளில் நிலவி வரும் தவறான கருத்துகளை உடைக்கும் வகையில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மிஷா ஜோஸ்விக் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝙼𝚒𝚜𝚑𝚊 :: 𝚃𝚁𝙰𝚅𝙴𝙻 𝙲𝚁𝙴𝙰𝚃𝙾𝚁 :: 𝚂𝚃𝙾𝚁𝚈𝚃𝙴𝙻𝙻𝙴𝚁 (@journeymoods)

இந்தியா மிகவும் அசுத்தமானது மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்று பலரும் எச்சரித்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் அவர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கோல்டன் டிரையாங்கிள் எனப்படும் முக்கியச் சுற்றுலாப் பாதையில் அவர் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் மக்களின் அன்பான உபசரிப்பு ஆகியவற்றைக் கண்டு தான் வியப்படைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு வண்ணமயமான தேசம் என்று குறிப்பிட்டுள்ள மிஷா, சில இடங்கள் நெரிசலாகவும் தூய்மையற்றதாகவும் இருக்கலாம், ஆனால் அதுவே இந்த நாட்டின் தனித்துவமான அடையாளம் என்று பதிவிட்டுள்ளார்.

தனது பயணத்தின் போது தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், மற்றவர்கள் கூறுவது போல இந்தியா ஆபத்தான நாடு அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டைப் பற்றியும் தவறான முடிவுக்கு வரக்கூடாது என்றும், இங்குள்ள உணவு மற்றும் கட்டிடக்கலைகள் உலகத் தரம் வாய்ந்தவை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

எதிர்மறையான கருத்துகளை விட இந்தியாவிடம் ரசிக்க இன்னும் பல நல்ல விஷயங்கள் உள்ளதாக அவர் தனது அனுபவத்தின் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.