கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், வேந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் பாபு (52). இவர் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த இவர், ‘முராரி ஜோதிஷாலயம்’ என்ற முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். ஜோதிடம் பார்க்க வரும் மக்களிடம் பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி, அதனை விரட்ட ராஜன் பாபுவை அணுகியுள்ளார். தனது வீட்டில் பேயோட்டும் சடங்குகளை நடத்திய ராஜன் பாபு, “சிறுமியுடன் நான் தனியாகச் சடங்கு செய்ய வேண்டும், நீங்கள் வெளியே இருங்கள்” எனக் கூறி தாயை வெளியே அனுப்பியுள்ளார்.

அறைக்கதவை மூடிய ராஜன் பாபு, அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே வந்த சிறுமி அழுதுகொண்டே தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், ஜோதிடரின் வீட்டின் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பயந்துபோய் தலைமறைவாகி ஒரு விடுதியில் தங்கியிருந்த ராஜன் பாபுவை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து க பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ஆர். ராஜேஷ் கூறுகையில், “ராஜன் பாபு ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஒரு மூத்த ஜோதிடரிடம் தொழில் கற்றுக்கொண்டு ஜோதிடராக மாறினார். அவருக்கு எதிராக வரும் முதல் புகார் இதுதான்” எனத் தெரிவித்தார். மேலும் பக்தியின் பெயரால் சிறுமிக்கு நேர்ந்த இந்த அநீதி கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.