உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள வாரணாசி – சக்திநகர் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை நடந்த பயங்கர சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அடல்ஹாட் காவல் எல்லைக்குட்பட்ட கௌராடி கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்ற அந்த இளைஞர், சாலையோரம் நின்றிருந்த கனரக வாகனத்தைக் கண்டு திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சரிந்தபோது, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது.

 

இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கவனக்குறைவாக நிறுத்தப்படும் வாகனங்களே இது போன்ற உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.