உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அந்த குடும்பத்தின் வினோதமான வாழ்க்கை முறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார், தனது மூன்று மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த வீட்டில் மூன்று படுக்கையறைகள் இருந்தபோதிலும், தற்கொலை செய்துகொண்ட மூன்று சிறுமிகள் உட்பட மொத்தம் ஒன்பது பேரும் ஒரே அறையிலேயே உறங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உறவுமுறை மற்றும் அந்த வீட்டின் சூழல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்தன் குமார் தனது முதல் மனைவி சுஜாதாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக ஹினாவை இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார். ஆனால், சுஜாதாவின் மூத்த மகளுக்கே 16 வயதாகிறது என்பதால், அவரது வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர்.
கடந்த 2010-ல் சுஜாதாவையும், 2013-ல் ஹினாவையும் திருமணம் செய்த இவர், 2023-ல் தீனா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இதில் தீனா, இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து பெறாமல் மூன்று திருமணங்கள் செய்தது குறித்து கேட்டபோது, “யாருக்கும் இதில் புகாரில்லை, மனைவிகளின் சம்மதத்துடனேயே திருமணங்கள் நடந்தன” என்று சேத்தன் பதிலளித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகளும் கொரிய கலாசாரத்தின் (Korean Culture) மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் எப்போதும் கைபேசியில் மூழ்கியிருந்ததால், ஆத்திரமடைந்த தந்தை சேத்தன் அவர்களது கைபேசிகளைப் பறித்து விற்றுள்ளார். இதனால் நண்பர்களுடன் பேச முடியாமலும், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாமலும் சிறுமிகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
தற்கொலை செய்த அன்று இரவு, தாயின் கைபேசியைப் பயன்படுத்த முயன்றும் அவர்களால் கொரிய செயலிகளை (Korean Apps) இயக்க முடியவில்லை என்பது தடய அறிவியல் சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவிங்-டு கெதர்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததும், அந்த வழக்கு தற்கொலை என முடிக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் சிறுமிகள் எழுதிய 9 பக்க கடிதத்தில், தங்களது தந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதில் தங்களது தாய்மார்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. குடும்பத் தகராறு மற்றும் மன அழுத்தம் ஆகிய கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
