ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.125 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை காலை தொடங்கிய இந்த வருமான வரிச் சோதனை, சனிக்கிழமை நள்ளிரவு வரை சுமார் நான்கு நாட்களாக நீடித்தது. ஃபரிதாபாத் முழுவதும் பில்டர்கள், பள்ளி உரிமையாளர்கள், தனியார் பாதுகாப்பு முகமைகள் மற்றும் நான்கு முக்கிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, முறையான ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.22 கோடி ரொக்கம் மற்றும் பெருமளவிலான தங்கம், வெள்ளி, வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நகைகளின் மதிப்பு நிபுணர்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

இதுவரை ரூ.125 கோடிக்கும் அதிகமான மறைமுக வருமானம் கண்டறியப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் போது இந்தத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரேட்டர் ஃபரிதாபாத்தில் உள்ள மாடர்ன் டிபிஎஸ் பள்ளி, ஸ்ரீஜி எனர்ஜி, ராணி எலக்ட்ரோடு, பகவதி காலம்ஸ் மற்றும் ஆரிக் பில்டர் ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்களில் இந்த மெகா ஆபரேஷன் நடைபெற்றது. ஆவணங்களை அழிப்பதைத் தவிர்க்க 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கின.

முதற்கட்ட விசாரணையில், போலி பெயர்களில் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக வருமானத்தை மிகக் குறைவாகக் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ‘ஷெல்’ நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட கணினி தரவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.