புதுச்சேரியில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘லட்சிய ஜனநாயக கட்சி’ தற்பொழுது ஒரு முக்கிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த லீமா ரோஸ் மார்ட்டின், திடீரென தனது பதவியைத் துறந்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின், புதிய கட்சி தொடங்கப்பட்டபோது மிக முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது விலகல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “கட்சியில் பணியாற்றியபோது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சி தொடங்கப்பட்ட சில காலத்திலேயே முக்கிய நிர்வாகி ஒருவர் ‘கசப்பான அனுபவங்களை’ மேற்கோள் காட்டி விலகியிருப்பது புதுச்சேரி அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.