அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி, 2019-ல் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது அவர் தொடர்பான பல ரகசிய ஆவணங்கள் (Epstein Files) நீதிமன்ற உத்தரவுப்படி பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல் உலகையே உறைய வைத்துள்ளது.

மெக்ஸிகோவின் சாண்டா ஃபே அருகே உள்ள தனது பிரம்மாண்டமான ‘சோரோ ரான்ச்’ (Zorro Ranch) பண்ணை வீட்டில், தனது விந்தணுக்களைக் கொண்டு பெண்களைக் கருவூட்டி, ஒரு ‘சூப்பர் மனித இனத்தை’ (Super Race) உருவாக்க எப்ஸ்டீன் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒரே நேரத்தில் சுமார் 20 பெண்களைத் தனது பண்ணையில் தங்கவைத்து அவர்களைக் கர்ப்பமாக்க அவர் விரும்பியதாக, அவருடன் பழகிய நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதைச் சிலர் ‘குழந்தைப் பண்ணை’ (Baby Farm) என்றே அழைத்துள்ளனர். மரபணு பொறியியல் (Genetic Engineering) மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் மனித இனத்தையே மேம்படுத்த வேண்டும் என்ற அவரது விசித்திரமான மற்றும் குரூரமான ஆசை, தற்போது இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், உலகப் புகழ்பெற்ற பல விஐபிக்களின் பெயர்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது உலகளவில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது.