மலேசியாவைச் சேர்ந்த 23 வயது சமூக ஊடகப் பிரபலம் டாங் சீ லுக், வீடற்ற முதியவர் ஒருவருக்கு எலும்புகள் கலந்த உணவை வழங்கிய வீடியோவை வெளியிட்டதற்காக 40,000 மலேசிய ரிங்கிட் (சுமார் ₹9.2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த வீடியோவில், மூன்று சிறுவர்கள் கோழி இறைச்சியைத் தின்றுவிட்டு, மீதமிருந்த எலும்புகளைச் சோற்றுடன் கலந்து ஒரு முதியவருக்குத் தானம் செய்வது போலக் காட்டியிருந்தனர். “நல்ல காரியம் செய்யப் போகிறோம்” என்ற பெயரில் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றது.
அந்த முதியவரும் இதனால் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய டாங், இது ஒரு பொழுதுபோக்குக்காகச் செய்யப்பட்ட வீடியோ என்று கூறினார்.
இருப்பினும், இது தானம் அல்ல, மற்றவர்களின் வறுமையைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் செயல் எனக்கூறிய நீதிபதி அவருக்குக் கடும் அபராதம் விதித்தார். அபராதத்தைத் கட்டத் தவறினால் 4 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்த நிலையில், அவர் உடனடியாகப் பணத்தைச் செலுத்தினார்.
தற்போது அந்த வீடியோ நீக்கப்பட்டு அவர் பொதுமன்னிப்பு கேட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட முதியவரிடம் நேரடியாகச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
