மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த மெகபூப் ஷேக் மற்றும் மினாரூல் ஷேக் உட்பட 7 இந்தியக் குடிமக்களை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் வைத்து போலீசார் சட்டவிரோதமாக நைஜீரியர்கள் அல்லது வங்கதேசத்தினர் என நினைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். எவ்வித முறையான விசாரணையும் இன்றி அவர்கள் மேற்கு வங்க எல்லை வழியாக வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், இவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்த மத்திய அரசும், எல்லைப் பாதுகாப்புப் படையும் இவர்கள் அனைவரும் இந்தியப் பிரஜைகள் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டன. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, இவர்கள் அனைவரும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீண்டும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
தற்போது மீண்டும் வாழ்வாதாரத்திற்காக மும்பைக்கே திரும்பியுள்ள 37 வயதான மெகபூப் ஷேக் பேசுகையில், “என்னை மீண்டும் போலீசார் பிடித்து நாடு கடத்தி விடுவார்களோ என்ற பயத்துடனேயே வாழ்கிறேன். ஆனால் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்த வேண்டுமே” என கண்ணீருடன் கூறினார். மற்றொரு பாதிக்கப்பட்டவரான மினாரூல் ஷேக், இந்த சம்பவத்தால் ஏற்பட்ட கடன் சுமையைத் தாங்க முடியாமல் தனது 1 பிகா நிலத்தை விற்க நேரிட்டதாகவும், தற்போது உயிருக்கு அஞ்சியபடி காஷ்மீரில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், டெல்லியில் கர்ப்பிணியாக இருந்தபோது கணவருடன் வங்கதேசத்திற்கு விரட்டப்பட்ட சுனாலி கதூன் என்பவரின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு திரும்பிய அவருக்கு டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி நேரில் சென்று குழந்தைக்கு ‘அபோன்’ (நம் சொந்தம்) என்று பெயரிட்டார். ஆனால், தங்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து எந்தவொரு வேலைவாய்ப்போ, நிதியுதவியோ கிடைக்கவில்லை என்றும், தங்களின் கணவர்கள் இன்னும் எல்லைக்கு அப்பால் தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
