உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் குஜைனி  பகுதியில், நடுரோட்டில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கடுமையான கொடுமைகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது நோய்வாய்ப்பட்ட கணவன் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

இதனை மோப்பம் பிடித்த அவரது கொழுந்தனான ஹேமந்த் சர்மா, வழியிலேயே அவர்களை வழிமறித்து அந்தப் பெண்ணை கன்னத்தில் பயங்கரமாக அறைந்துள்ளார். இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே, ஹேமந்தின் நண்பன் சந்தீப் சச்சான் என்பவனும் அங்கு வந்து சேர்ந்துள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடுரோட்டில் கொடூரமாக அடித்துள்ளனர். அந்தப் பெண்ணை செருப்பாலும் கைகளாலும் சரமாரியாக தாக்கியதுடன், சற்றும் இரக்கமின்றி அவரது ஆடையையும் கிழித்து எறிந்துள்ளனர்.

கொடூரமாக தாக்கப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்ற அந்த நோயாளி கணவன் முயன்றபோது, அவரையும் அந்த மிருகங்கள் விட்டுவைக்காமல் சரமாரியாக அடித்துத் துவைத்துள்ளனர். இந்த பயங்கரமான தள்ளுமுள்ளுவின் போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவர்களின் 3 வயது குழந்தையும் பலத்த காயமடைந்துள்ளது. கொடூரமான அடி உதை தாங்க முடியாமல் அந்தப் பெண் நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த நபர் ஒருவர் இக்கொடூரச் செயலை தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். புதன்கிழமை இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து  போலீசார் உடனடியாக களத்தில் குதித்தனர். இதுகுறித்து தெற்கு டிசிபி தீபேந்திர நாத் சௌத்ரி கூறுகையில், “வைரல் வீடியோவின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதன்மை குற்றவாளிகளான ஹேமந்த் சர்மா மற்றும் சந்தீப் சச்சான் ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.