இமாச்சல பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயில் அருகே, புதன்கிழமை நள்ளிரவில் ராஜஸ்தான் சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஸ்கார்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பாலத்தின் மீது கார் மோதியதில், அங்கிருந்த ராட்சத இரும்பு கம்பிகள் காரை முழுமையாக துளைத்துக்கொண்டு மறுபுறம் வந்துள்ளன.
காரின் இரும்பு கூடுகளை கிழித்துக்கொண்டு கம்பிகள் உள்ளே புகுந்ததில், வாகனம் உருக்குலைந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் (34) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டிவந்த சித்தார்த், ராஜேந்திரா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
A 34-year-old tourist from Rajasthan, identified as Kailash Kumar, was killed, while three others were injured after their Scorpio SUV met with a serious accident near the north portal of the Atal Tunnel in Himachal Pradesh’s Kullu district.
The accident occurred on July 1, when… pic.twitter.com/HuohqY5PSO
— Mukesh Prasad (@mksh_prsd) July 1, 2026
போலீசார் அளித்த தகவலின்படி, இந்த சுற்றுலா குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மணாலியிலிருந்து லாஹவுல் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே, கார் அதிவேகமாகச் சென்றதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலையின் அபாயகரமான வளைவில் காரைத் திருப்ப முடியாமல் போனதால், கார் சந்திரா நதியை நோக்கி பாய்ந்து, அங்கிருந்த பாலத்தின் கட்டுமான அமைப்பில் மோதியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை சிஸ்சு பகுதி நிலைய அதிகாரி முகேஷ் ரத்தோர் தலைமையிலான மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கைலாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
