இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) 2025-26 ஆம் ஆண்டுக்கான புதிய வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாற்றமாக, 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்ட ‘Grade A+’ பிரிவு நீக்கப்பட்டு, தற்போது ஏ, பி மற்றும் சி என மூன்று பிரிவுகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன.
கிரேடு ஏ பிரிவில் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டும் இடம்பெற்று ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கிரேடு பி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரிவில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு தலா 3 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படவுள்ளது.
கிரேடு சி பிரிவில் சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் உட்பட மொத்தம் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், இவர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் ஊதியம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 30 ஆண் வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
பெண்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை பொறுத்தவரை, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட 4 வீராங்கனைகள் டாப் பிரிவான கிரேடு ஏ-வில் இடம்பிடித்துள்ளனர். மொத்தம் 21 வீராங்கனைகள் இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
