2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான், தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடும் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைக் கடுமையாக விமர்சித்துள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை ஒரு “அரசியல் நாடகம்” என்று சாடியுள்ளார். பங்களாதேஷில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், அங்கிருக்கும் தற்போதைய முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் காட்டிக்கொள்ளவே பாகிஸ்தான் இந்த வேலையைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

​”உண்மையிலேயே பங்களாதேஷுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், பாகிஸ்தான் இந்தத் தொடரிலிருந்து முழுமையாக விலகியிருக்க வேண்டும்; அதை விடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என கவாஸ்கர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஐசிசி (ICC) விதித்த நிபந்தனைகள் மற்றும் நிதி நெருக்கடி காரணங்களால் பாகிஸ்தான் இந்த ‘யூ-டர்ன்’ முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் மெகா மேட்ச் உறுதியாகியுள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், கிரிக்கெட்டில் அரசியல் புகுத்தப்படுவதற்கு கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.