கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள புகழ்பெற்ற திரிபுனித்துரா பூர்ணத்ரயீசர் கோவில் திருவிழாவில், யானை ஒன்று திடீரென மிரண்டு ஓடிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அதாழ சீவேலி எனும் சடங்கிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற யானை அழைத்து வரப்பட்டது.
கோவில் கோபுர வாயில் அருகே வந்தபோது அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்து, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே தள்ளிவிட்டு கோவில் வளாகத்திற்குள் ஓடியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யானையின் ஆக்ரோஷம் கட்டுக்கடங்காமல் போனதால், பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு கோவிலின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. தகவலறிந்து பல்லுருட்டி அழகிய காவு கோவிலில் இருந்து வந்த யானைப் படை நிபுணர்கள், சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு யானையைச் சாந்தப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காயமடைந்த பாகன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றம் கோவில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
