பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள உஸ்மா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், திங்கள்கிழமை காலை சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலாம் ஆண்டு பயின்று வரும் பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகத் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து, சக மாணவியான சந்தீப் கவுரின் தலையில் சுட்டார். இதில் சந்தீப் கவுர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரின்ஸ் ராஜ் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த கொடூரக் காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மாணவர் எப்படித் துப்பாக்கியுடன் கல்லூரிக்குள் வர முடிந்தது என்று உயிரிழந்த மாணவியின் தாயார் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இருவருக்கும் இடையேயான நட்பு அல்லது காதல் விவகாரம் ஏதேனும் இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.