தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போதைய முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து திடீரென விலகியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் விலகியதாகக் கூறப்பட்டாலும், அவருக்கு வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் முக்கியத்துவம் குறைவாக இருந்ததே இந்த அதிருப்திக்குக் காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற முக்கியமான கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

​அண்ணாமலையின் இந்த அதிருப்தி தேர்தல் நேரத்தில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் பி.எல். சந்தோஷ் நேரடியாகக் களமிறங்கியுள்ளார். அண்ணாமலையை நேரில் சந்தித்துச் சமாதானம் பேசி, அவரை மீண்டும் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வைப்பதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 65 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அண்ணாமலை போன்ற ஒரு தீவிரமான களப்பணியாளரை இழக்கத் தலைமை விரும்பவில்லை என்பதே பி.எல். சந்தோஷின் இந்த அவசர வருகைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.