தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக மேலிடம் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர் ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டு புதிய அரசியல் பாதையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், “என்னுடைய அரசியல் பாதை வேறு என்பதை ஏற்கனவே டெல்லி தலைமையிடம் தெளிவுபடுத்திவிட்டேன்; தமிழர் பண்பாட்டை மதித்து, அவர்களின் அழைப்பின் பேரிலேயே டெல்லி வந்தேன்” என்று கூறியுள்ள அண்ணாமலை, இன்று முதல் ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களாகவே தனக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கொள்கை ரீதியாகக் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், தன் கருத்துக்களுக்கு அங்குச் செவி சாய்க்கப்படாததால், எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தமிழக அரசியலின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அன்போடும் ஆனந்தத்தோடும் தொடங்கப்படும் தங்களது புதிய அரசியல் இயக்கம், அடுத்து வரவிருக்கும் தமிழகப் பொதுத்தேர்தலில் கண்டிப்பாகக் களம் காணும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.