பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவின் வாக்கு சதவீதத்தை தமிழகத்தில் அதிகரித்தார். இருப்பினும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் அவருக்கும் இடையே பல அதிருப்திகள் நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தேசிய தலைமை இன்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நேரலையில் பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அறிவித்த அண்ணாமலை 18 மாதங்களாகவே தேசிய தலைமைக்கும் தனக்கும் அதிருப்தி இருந்ததாக கூறினார். தான் பாஜகவில் இருந்தாலும் ஒருபோதும் தமிழ்நாட்டின் உரிமையையும் தமிழ் மக்களின் நலனையும் விட்டுக் கொடுத்ததில்லை என்றும் ஒரு இந்தியனாகவே என்னுடைய கடமைகளை செய்து வருகிறேன் என்றும் கூறினார். அதன் பிறகு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில் அடுத்த தேர்தல்களில் நம்முடைய இயக்கம் போட்டியிடும் என்றார்.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாகவே ரஜினி ஆதரவோடு அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இது குறித்தும் அவர் பேசினார். அதாவது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் தான் சேர இருந்த சமயத்தில் ரஜினிகாந்த் அவர் தொடங்க இருந்த புதிய கட்சியில் சேர தன்னை அழைத்ததாக கூறினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் என்னை அழைத்த நிலையில் நான் ஏற்கனவே பாஜகவில் சேர்வதாக வாக்கு கொடுத்து விட்டதால் அவருடைய கட்சியில் என்னால் இணைய முடியாமல் போய்விட்டது. மேலும் இதற்காக நான் நேரில் ரஜினிகாந்தை சந்தித்து மன்னிப்பு கூட கூறினேன் என்றார்